தப்பிவந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை- மாவட்டச் செயலாளர்!

கொழும்பில் கொரோனா அபாய பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்து பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரும் சாரதியும் நேற்று இரவு இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தவகையில் குருநகர், பீச் வீதியைச் சேர்ந்த ஒருவர்,யாழ்ப்பாணம் ஐந்துசந்தி- ஒஸ்மானியா வீதியைச் சேர்ந்த ஒருவர், சங்கானை- ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவர், சுழிபுரம் – தொல்புரத்தைச் சேர்ந்த ஒருவர் தெல்லிப்பழை (சந்திக்கு அருகில்) ஒருவர், நாவற்குழி வீட்டுத்திட்டம் பகுதியைச் சேர்ந்த மூவர் மற்றும் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சாரதி ஆகிய ஒன்பது பேரே இவ்வாறு தனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

சாரதி யாழ்ப்பாணத்தில் இருந்து அத்தியாவசி சேவைக்கான அனுமதிப்பத்திரத்துடன் சென்றுள்ள நிலையில் ஏனையவர்கள் தொழில்நிமித்தம் கொழும்பில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை குறித்த நபர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உண்மையைக் கூறி உரிய வகையில் இங்கு வருகை தந்திருக்க முடியும் என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர்களால் சொந்தக் குடும்பத்தினருக்கும் அயலவர்களுக்கும் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor