சொதப்பிய தோனி.. சிஎஸ்கே தோல்வி

தோனி செய்த பெரிய தவறு காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒரு தோல்வியை தழுவியுள்ளது. துபாயில் இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 164 ரன்கள் எடுத்தது.

ஆல்ரவுண்டர் பிராவோ வருகை, அம்பத்தி ராயுடு வருகை உள்ளிட்டவற்றால் பலம் நிறைந்த பேட்டிங் அணியாக காணப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் எளிதாக துரத்திப் பிடிக்கக்கூடிய இலக்குதான் இது

ஆரம்பத்தில் புவனேஸ்வர் குமார் வீசிய அருமையான ஸ்விங் பந்து வீச்சு காரணமாக ரன் ரேட்தடைபட்டது உண்மைதான்.
ஓப்பனிங்கில் இறக்கிக் கொண்டிருந்த முரளிவிஜய் இந்த போட்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டு வாட்சன் டுப்லஸிஸ் ஓபனிங்கில் ஜோடி சேர்ந்த போதிலும் வழக்கம் போலவே இந்த முறையும் துவக்க ஆட்டம் சோபிக்கவில்லை.
இருப்பினும் ரவீந்திர ஜடேஜா, தோனி பார்ட்னர்ஷிப் கொடுத்து மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி தள்ளிக் கொண்டு வந்தனர்.
ரவீந்திர ஜடேஜா அரைசதம் அடித்து போட்டிக்கு உள்ளே சென்னை அணியை கொண்டு வந்தார். எல்லாம் ஓகே தான். ஆனால் சொதப்பல் ஆரம்பித்தது கடைசி 2 ஓவர்களில். கடைசி 2 ஓவர்களில் 44 ரன்கள் தேவைப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு.

அதற்கு முந்தைய ஓவரில் நடராஜன் வீசிய பவுன்சர் பந்தை அழகாக சிக்ஸர் விளாசி இருந்தார் குட்டிப்பையன் சாம் கர்ரன். அதுவும் தான் சந்தித்த முதல் பந்தில் அப்படி ஒரு சூப்பர் சிக்ஸ் விளாசினார். 19ஆவது ஓவரின் முதல் பந்தை புவனேஸ்வர் குமார் வீச, ஒரு ரன் எடுத்து விட்டு ஓடி வந்தார் சாம் கர்ரன் .

அதற்குப் பிறகு காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் வெளியேறி விடவே மீதமிருந்த 5 பந்துகளையும் வீசுவதற்கு கலீல் அஹமது அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் தோனி கஷ்டப்பட்டு தலா 2 ஓடினார்.
அணி நிர்வாகம் மட்டுமல்ல, பார்த்துக்கொண்டு ரசிகர்கள் கூட ஒரு ரன்னோடு நிறுத்தியிருக்கலாமே. அழகாக ஆடிக்கொண்டிருக்கும் குட்டிப்பையன் சாம் மேட்ச்சை முடித்து வைத்திருப்பார்.
எதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டு காலில் சுளுக்கு ஏற்படுத்திக் கொண்டு ஓட வேண்டும் என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அத்தனை கஷ்டத்திலும் தோனி 2, 2 ரன்களாக ஓடி எதிர்முனையில் நின்ற சாம் கர்ரன்க்கு பேட்டிங் தரவில்லை.
இது போதாது என்று அந்த ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து விட்டு ஓடினார் தோனி எனவே கடைசி ஓவரின் முதல் பந்தை தோனி சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
6 பந்துகளில் 23 ரன்கள் தேவை லெக் ஸ்பின்னர் அப்துல் சமத் அந்த ஓவரை வீசினார் ஒருவேளை சாம் பேட்டிங் முனையிலிருந்து இருந்தால் லெக் ஸ்பின்னர் பந்துவீச்சை, இடதுகை பேட்ஸ்மேனான சாம் கர்ரன் எளிதாக சிக்சர்கள் விளாசி இருக்க முடியும்.
ஆனால் முக்கி முக்கி ரன்​ அடித்துக்கொண்டிருந்த தோனி அந்த ஓவரில் வெறும் 2 பந்துகளை மட்டும்தான் சாம் சந்திப்பதற்கு அவகாசம் ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதில் ஒன்று கடைசி பந்து அப்போது மேட்ச் சென்னை அணியை விட்டு கைநழுவிப் போய் இருந்தது அப்படியும்​ அலேக்காக ஒரு சிக்சர் அடித்தார்​ சாம் கர்ரன்.
அப்படி ஒரு அழகான சிக்ஸ் அது அதை பார்த்ததும் தான் ரசிகர்களுக்கு இன்னும் வெறி அதிகமாகி விட்டது தோனி ஒரு ரன்னோடு நிறுத்தி இருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்று திட்டி தீர்க்க ஆரம்பித்துவிட்டனர்.
கிட்டத்தட்ட சாம் பந்துகளை சந்திக்க முடியாத அளவுக்கு தோனியே அனைத்து பந்துகளையும் சந்தித்தார்.
ஆனால் அவர் எவ்வளவுதான் முக்கி முக்கி அடித்தாலும் பந்து என்னவோ பாதி மைதானத்தை கூட தாண்ட மாட்டேன் என்று அடம் பிடித்தது.
ஒருவேளை தோனி அவுட் ஆகி இருந்தாலும் அதிரடி மன்னன் பிராவோ பின்வரிசையில் இருந்தார்.
அவர் பெவிலியனில் உட்கார்ந்து வேடிக்கை தான் பார்க்க முடிந்ததே தவிர களத்துக்கு வரமுடியவில்லை.
தானும் அடிக்காமல் அடிப்பவருக்கும் வாய்ப்பு தராமல் மொத்த போட்டியையும் தோனி சொதப்பித் தள்ளியதன் விளைவாக 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்று உள்ளது.

Recommended For You

About the Author: Editor