பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மியன்மாரில் பொதுத் தேர்தல்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மியன்மாரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமான தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

இராணுவத்துக்கு முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.

இந்தத் தேர்தலில், தற்போதைய அரசின் தலைவர் ஆங் சான் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சியை எதிர்த்து, தான் டே தலைமையிலான ஐக்கிய ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி போட்டியிடுகிறது.

நாட்டில் தொடர்ந்து இராணுவ ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகி அமோக வெற்றி பெற்றார்.

எனினும், அரசியல் சாசன சிக்கல் காரணமாக அவரால் ஜனாதிபதி பதவியை ஏற்க முடியவில்லை. இதையடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட அரசுத் தலைவர் பதவியை அவர் வகித்து வருகிறார்.

எனினும், ஆட்சியில் இராணுவத்தின் ஆதிக்கத்தைக் குறைத்து ஜனநாயகத்தை மேம்படுத்த அவர் தவறியதாக கருத்து நிலவுகிறது. எனவே, கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு ஆங் சான் சூகிக்கு இந்தத் தேர்தலில் அமோக ஆதரவு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor