புடின் பதவி விலகும் தகவலை மறுத்தது ரஷ்யா!

ரஷ்யாவின் நீண்டகால ஜனாதிபதியான விளாடிமீர் புடினுக்கு, பார்கின்சன் நோய் ஏற்பட்டுள்ளதால், அவர் அடுத்த ஆண்டு பதவி விலக திட்டமிட்டுள்ளார் என பிரித்தானிய செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவலை ரஷ்யா மறுத்துள்ளது.

அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்’ என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாக ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பார்கின்சன் நோய்க்கான அறிகுறிகளைக் காட்டிய புடின் அடுத்த ஆண்டு விலகத் திட்டமிட்டுள்ளதாக ஆதாரங்களை மேற்கோளிட்டு தி சன் செய்தி வெளியிட்ட பின்னர் இந்த அறிக்கை வந்துள்ளது.

பிரித்தானிய செய்தித்தாளின் கூற்றுப்படி, ‘ரஷ்ய ஜனாதிபதி புடின் பார்கின்சன் (மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாவது) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்த வருடம் தனது பதவியிலிருந்து விலகக்கூடும். 68 வயதான புடின் தொடர்ந்து கால் மற்றும் கைகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வலியை உணர்கிறார்’ என தெரிவித்தது.

ஆனால் இதனை மறுத்துள்ள ரஷ்யா, ‘புடின் உடல் நிலை சரியாக உள்ளது. அவர் ஆரோக்கியமாக உள்ளார். அவருக்கு பதவி விலகும் எண்ணம் இல்லை’ என தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் சட்டமன்றத்தின் கீழ் சபை, ரஷ்ய முன்னாள் ஜனாதிபதிகள் பதவியில் இருந்தபோது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்நாளில் குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுபடக்கூடிய ஒரு சட்டத்தை முன்மொழிந்தது.

இந்தநிலையில் புடினுக்கு உண்மையிலேயே பார்கின்சன் நோய் ஏற்பட்டுள்ளதா அல்லது ரஷ்யா அரசாங்கம் இதனை மறைக்கின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor